Thursday, January 14, 2016

பதின்மூன்றாவது சர்க்கம் - விரக்தியில் ஹனுமான்

 குறிப்பு - இந்த வலைப்பதிவின் அறிமுக இடுக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, இந்த சர்க்கத்தைப் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் மறைந்து நம்பிக்கையான மனநிலை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும் செய்யும். இதை அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். (பாராயணம் செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் youtube இணைப்பில் ஸ்லோகங்களைக்  கேட்டு உடன் சொல்லிப் பழகலாம். சுந்தரகாண்டம் புத்தகம் ஒன்று வாங்கி அதைப் படித்துக்கொண்டே ஒலிவடிவத்திலும் கேட்டுப் பழகினால் தெளிவான உச்சரிப்பு கிடைப்பதுடன், ஸ்லோகங்கள் சீக்கிரம் மனனம் ஆகும். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சமஸ்கிருதம், தமிழ் அல்லது வேறு  மொழி வடிவங்களில் சுந்தர கண்டச் செய்யுள்கள் நூல் வடிவில் பல கடைகளில், குறிப்பாக பக்தி நூல்கள் விற்கப்படும்கடைகளில், கிடைக்கும். பாராயணம் செய்து ஹனுமானின் அருளையும், சீதாப்பிராட்டியுடன் கூடிய ராமபிரானின் அருளையும்பெறுவீர்களாக)

https://www.youtube.com/watch?v=ReCPgBc6nWo

பதின்மூன்றாவது சர்க்கம் 

மேகக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றும் மின்னலைப்போல அந்த உயர்ந்த கட்டிடத்தின் சுவரை வேகமாகத் தாண்டிக் குதித்தார் அந்த வானரத் தலைவர். ராவணனின் மாளிகை முழுதும் தேடியும் ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் ஹனுமானின் சிந்தனை இவ்வாறு ஓடியது:

"ராமபிரானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்  இலங்கை முழுவதும் தேடி விட்டேன். ஆயினும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏரிகள், குளங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், கோட்டைகள், மலைகள் என்று ஒரு இடம் கூட விடாமல் தேடி விட்டேன். ஆயினும் சீதையைக் காணவில்லை. கழுகு அரசர் சம்பாதி சீதை ராவணனின் மாளிகையில்தான் இருக்கிறார் என்ற தகவலை அளித்தார். ஆனால் சீதையை இங்கே என்னால் காண முடியவில்லை.

"சீதை ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்லர். விதேஹ  அரசர் ஜனகரால் மிதிலை என்னும் உயர் பண்பாட்டு நகரில் வளர்க்கப்பட்ட அவர்  வேறு வழியில்லாமல் ராவணனின் விருப்பத்துக்கு இணங்கி இருப்பார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ராமபிரானின் அம்புகள் தன் மீது பாயுமோ என்ற அச்சத்துடன் சீதையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் ராவணன் பறந்தபோது ஒருவேளை சீதை அவன் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து இறந்திருப்பாரோ என்று ஐயமாக இருக்கிறது.

அல்லது கடலுக்கு மேல் சித்தர்கள் செல்லும் பாதையில் ராவணன் சீதையைத் துக்கிக்கொண்டு பறந்தபோது கீழே தெரிந்த கடலைப் பார்த்து அவருக்கு மூச்சு நின்றிருக்கலாம். அல்லது ராவணன் பறந்து சென்ற வேகத்தில் கூட சீதைக்கு மூச்சு நின்று போயிருக்கலாம். அல்லது ராவணனின் பிடியிலிருந்து விடுபட அவர் முயன்றபோது கடலில் விழுந்து கூட இறந்திருக்கலாம்.

"சீதை தனது கற்பு நெறியில் உறுதியாக இருந்ததால் ராவணன் ஆத்திரமடைந்து  அவரைத் தின்றிருக்கலாம். அல்லது ராவணனின் மனைவிகள் கூட அவரைத் தின்றிருக்கலாம். அல்லது  வேறு வழியில்லாமல், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட, முழுநிலவு போன்ற இராமபிரானின் திருமுகத்தை மனதில் தியானித்தபடியே  சீதாப் பிராட்டி உயிர் நீத்திருக்கலாம்.

மிதிலை தேசத்து அரசரின் மகள் தனது விதியை நொந்தபடி, 'ராமா! லக்ஷ்மணா! அயோத்தி மாநகரே!" என்றெல்லாம் புலம்பிக்கொண்டே தன உயிரை விட்டிருக்கலாம். அல்லது ராவணனின் ஏதாவது ஒரு சிறையில் அவர் ஒரு கூண்டுப் பறவை போல் சிறை வைக்கப்பட்டிருக்கலாம். ராமபிரானை மணமுடித்தவரும், ஜனகரின் அரண்மனையில் வளர்ந்தவரும், அழகுக்கும் பண்புக்கும் பெயர் பெற்றவருமான  சீதை எப்படி ராவணனுக்கு அடி பணிவார்?

"சீதையிடம் ராமபிரான்  அளவற்ற அன்பு வைத்திருக்கும்போது அவரிடம் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றோ, துயரத்தினால் அவர் இறந்து விட்டார் என்றோ தெரிவிப்பது சரியாக இருக்காது. உண்மையைச் சொல்வதிலும் ஆபத்து இருக்கிறது, சொல்லாமல் இருப்பதிலும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எது சரியான வழி? எது நிலைமைக்குஏற்றதாக இருக்கும்? எது எல்லாருக்கும் பயனளிப்பதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்?" இது போன்று திரும்பத் திரும்பச்  சிந்தித்து மனம் குழம்பினார் ஹனுமான்.

அவரது சிந்தனை தொடர்ந்து ஓடியது? "சீதையைக் கண்டு பிடிக்காமல் வானர அரசனிடம்   நான் திரும்பச் சென்றால் அதனால் என்ன பயன் இருக்கும்? நான் கடலைத  தாண்டி  இ லங்கைக்குள் நுழைந்து அரக்கர்களைப பார்த்ததெல்லாம் வீணாகி விடாதா? இந்த நிலைமையில் நான் திரும்பிப் போனால் கிஷ்கிந்தாவில் உள்ள சுக்ரீவன், என் வானர நண்பர்கள், தசரத புத்திரர்கள் ஆகியோர்  என்னிடம் என்ன சொல்வார்கள்?

நான் திரும்பிப் போய் காகுஸ்த குடும்பத்தில் பிறந்த ராமனிடம், 'என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை' என்று சொன்னால், இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அவர் உடனே உயிரை விட்டு விடலாம். சீதையைப் பற்றிய மனதைப் பிளக்கும் துயரச் செய்தியை  நான் சொல்லக் கேட்டு அதிர்ச்சியினால் அவர் உடனே இறந்து விடலாம்.  தன் அண்னன் துயரத்தினால் இறந்து போவதைப் பார்த்து அவரது அன்புத் தம்பி லக்ஷ்மணனும் உயிரைத் துறந்து விடலாம். தனது இரண்டு சகோதரர்களும் இறந்த செய்தியைக் கேட்டு பரதனும் இறந்து விடுவார். அவரைத் தொடர்ந்து சத்ருக்னனும் இறந்து விடுவார். தங்கள் பிள்ளைகள் இறந்ததை அறிந்ததும் கௌசல்யா, கைகேயி, சுமித்திரை ஆகியோரும் உயிரை விட்டு விடுவார்கள்.

ராமரை இந்த நிலையில் பார்த்ததும், நன்றிக்கும், உண்மைக்கும் பெயர் பெற்ற  சுக்ரீவனும் தன் உயிரை விட்டு  விடுவார். தனது கணவன் இறந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் அவர் மனைவி ருமையும் இறந்து விடுவார். சுக்ரீவன் இறந்து போனால், ஏற்கெனவே வாலியின் மரணத்தினால் துயரடைந்து எலும்பாகத் தேய்ந்து போயிருக்கும்  தாரை இந்த இன்னொரு துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் இறந்து விடுவார்.

தனது பெற்றோர் இறந்த துயரத்தைத் தாங்கிக்கொண்டு அங்கதனால் மட்டும் எப்படி உயிர் வாழ முடியும்? தங்கள் தலைவன் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல் வானரர்களும் தங்கள் தலைகளை முஷ்டிகளால் அடித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள். புகழ் பெற்றவனும், பரந்த மனப்பான்மை உடையவனும், இனிமையாகப் பேசும் குணம் உடையவனுமான வானரத் தலைவன் சுக்ரீவன் இதுவரை வானரர்களைப பாதுகாத்து வந்திருப்பதால். அவர் இறந்த பிறகு உயிர் வாழ்வதை விட மடிந்து போவதையே வானரர்கள் விரும்புவார்கள்.

இந்த அற்புதமான வானரர்கள் இனிமேல்  விளையாட்டுப் போட்டிகளுக்காக கிராமங்களில் கூட மாட்டார்கள். அவர்களின் இருப்பிடமான மலைகளுக்கோ, காடுகளுக்கோ போக மாட்டார்கள்.  தங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பவர்கள், தங்கள் தலைவனின் மரணத்தின் வழியைத் தாங்க முடியாமல் மலைகளிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி அடையாவிட்டால், அவர்கள் விஷம் குடித்தோ, பட்டினி கிடந்தோ, தீயில் குதித்தோ அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.

"இந்தத் தோல்வியோடு நான் திரும்பப் போனால் இக்ஷ்வாகு வம்சத்துக்கும், வானரர்களுக்கும் பெரும் துயரம் நேரிடும். அதனால், இந்தத் துயரங்களுக்குக் காரணமாக விளங்கப் போகிற நான் கிஷ்கிந்தாவுக்கே போகப்போவதில்லை. மிதிலா தேசத்து அரசரின் திருமகளைக் கண்டுபிடிக்காமல் சுக்ரீவனைச் சந்திப்பது எனக்கு இயலாத காரியம்.  நான் இங்கிருந்து போகாவிட்டால், இந்த இரு உத்தமமான வீரர்களும் என்னுடைய முயற்சி வெற்றி அடையும் என்று எதிர்பார்த்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  வானரர்களும் இந்த எதிர்பார்ப்போடு உயிர் வாழ்வார்கள்.

"என்னால் ஜனகரின் மகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், நான் காட்டுக்குள் இருந்துகொண்டு ஏதோ  ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தபடி, என் ஐம்புலன்களையும் கட்டுப் படுத்திக்கொண்டு என் கையிலோ, வாயிலோ எந்த உணவுப் பொருள் வந்து விழுகிறதோ அதை உண்டு  ஒரு துறவி போல் வாழ்வேன். அல்லது கடற்கரையில், மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தில் தீயை மூட்டி அதில் குதித்து உயிரை விட்டு விடுவேன்.  அல்லது பட்டினி கிடந்து உயிர் விட்டு என் உடலைக் காக்கைகளுக்கும் மற்ற  பறவைகளுக்கும் இரையாக்குவேன். இது போன்ற மரணம்  உயர்ந்த முனிவர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜனகரின் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நான் நீரில் மூழ்கி இறந்து போவேன். நல்ல சகுனங்களுடனும், சாதகமான நிகழ்வுகளுடனும் தொடங்கிய இந்த நீண்ட இரவு முடிவதற்குள் சீதையை நான் கண்டுபிடிக்காவிட்டால் இது எனக்கு ஒரு வீணான இரவாக முடிந்து விடும். புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு மரத்தடியில் அமர்ந்து நான் ஒரு துறவியாக ஆகப்போவதுதான் அதன் விளைவாக  இருக்கும். அழகிய வடிவம் கொண்ட சீதையைக் கண்டுபிடிக்காமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை.  அவரைக் காணாமல் நான் திரும்பப் போனால் மற்ற  வானரர்களுடன் சேர்ந்து அங்கதனும் மடிந்து போவான். இறந்து போவதில் பல  இழப்புகளும் இருக்கலாம். ஆனால் உயிருடன் இருப்பவனால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும்.  இந்தக் கோணத்தில் பார்க்கும்போது உயிருடன் இருப்பதே நல்லது."

இது போன்று பல விஷயங்களைச் சிந்தித்த பிறகும், ஹனுமானின் துயரம் குறையவில்லை.  அவர் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். "ராமபிரானின் பத்தினிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற சிந்தனையை மறந்து விட்டு, பத்து தலைகள் கொண்ட ராவணன் என்ற அரக்கனை நான் கொல்லப்  போகிறேன்.  அப்படிச் செய்தால்தான்  பழி வாங்கிய திருப்தி எனக்கு ஏற்படும்.  அல்லது அவனைக் கடலுக்கு மேலே தூக்கிச் சென்று, நெருப்புக்கு மிருகத்தைப் பலி கொடுப்பது  போல் ராமருக்கு அர்ப்பணிப்பேன்."

துயரத்தால் பீடிக்கப்பட்டும், கனவு நிலையில் ஆழ்ந்தும்  என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் ஹனுமான். "உயர்ந்த குணங்களுக்குப் பெயர் பெற்ற  சீதையைக்  கண்டுபிடிக்கும் வரையில் நான் இந்த இலங்கை முழுவதும் தேடிக்கொண்டே இருப்பேன். சம்பாதியின் வார்த்தைகளை நம்பி நான் ராமரை இங்கே அழைத்து வந்திருந்தால், சீதையைக் கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் அவர் எல்லா வானரர்களையும் கொன்றிருப்பார். என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறிதளவே உணவு உட்கொண்டு நான் இங்கேயே இருக்கப் போகிறேன். இப்படிச்  செய்வதால் என்னால் அந்த மனிதர்களுக்கும், வானரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

"அதோ அசோக மரங்கள் நிறைந்த ஒரு பெறிய தோட்டம்  தெரிகிறது.நான் இன்னும் அங்கே சென்று   பார்க்கவில்லை. இப்போதே அந்த அசோக வனத்துக்குள்  நுழைகிறேன்."

இவ்வாறு  சொல்லிக்கொண்டே ஹனுமான் எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும்,   ஆதித்யர்களையும், அஸ்வினி தேவர்களையும், ஏழு மருத்களையும் வணங்கி விட்டு "இந்த அரக்கர்களுக்கு நான்  பெரும் நாசத்தை விளைவிப்பேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

"இந்த அரக்கர்களை அழித்து, சீதையை எடுத்துச் சென்று இக்ஷ்வாகு வம்சத்து வழித் தோன்றலான ராமனிடம், தவத்தின் பயனை  அளிப்பது போல்  சீதையை அளிப்பேன்."

இவ்வறு நினைத்துச்  சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட பின் சக்தி வாய்ந்த ஹனுமான் வருத்தம் என்ற தளையிலிருந்து விடுபட்டு,  தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார்.

"ராம லட்சுமணர்களுக்கு வணக்கம். ஜனகரின் மகளான சீதைக்கும் வணக்கம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூரியன், மருத்கணங்கள் ஆகியோருக்கும் வணக்கம்" என்று எல்லாரையும் மனத்துக்குள் வணங்கி விட்டு, சுக்ரீவனையும் வணங்கி விட்டு, அசோக வனத்துக்குச் செல்லும் எல்லாப்  பாதைகளையும் உற்று நோக்கினார்.

தனது நோக்கம் நிறைவேறுவதற்கு அசோகவனம்தான் வழி காட்டப் போகிறது என்று கருதி தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். "மரங்கள் அடர்ந்ததும், அரக்கர்களால் நிறைந்திருப்பதும் கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுமான அசோக வனத்துக்கு உடனே சென்று சீதையைத் தேடப் போகிறேன்.

"மரங்களுக்குப் பக்கத்தில் காவலர்கள் நிற்கிறார்கள்.  காற்றும் மெதுவாகத்தான் வீசுகிறது. ராவணன் மற்றும் அவன் வீரர்களின் கண்களுக்குப் புலப்படாமல் என் உடலைச் சுருக்கிக் கொள்வேன். ராமரின் நோக்கம் நிறைவேறும் பொருட்டு முனிவர்களும் தேவர்களும் என் முயற்சி வெற்றி பெற என்னை வாழ்த்தட்டும்.

"தானே தோன்றிய பிரமன், மற்ற தேவர்கள், அக்னி, வாயு, வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் ஆகியோர் என் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தட்டும். பாசக்கயிற்றை  ஆயுதமாகக் கொண்ட வருணன், சூரியன், சந்திரன், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், கணங்களுக்குத் தலைவரான பரமேஸ்வரன், மற்ற  தேவதைகள், நான் செல்லும் வழியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஆகியோர் என் முயற்சிகளுக்கு முழு வெற்றி அளிக்கட்டும்.

"நீண்ட  நாசியும், வெண்மையான பற்களும், மயக்கும் புன்சிரிப்பும், தாமரை இதழ் போன்ற கபடமற்ற கண்களும் கொண்ட சீதையின் முழுநிலவு போன்ற முகத்தை நான் எப்போது பார்க்கப் போகிறேன்? நல்லவன் போல் வேஷமிட்டு வந்த கொடூர குணம் படைத்த அரக்கனான ராவணனால் கடத்தப்பட்டு, எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் சீதை என் கண்களுக்கு எந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கப் போகிறாரோ!"Friday, November 13, 2015

பன்னிரண்டாவது சர்க்கம் - ஹனுமானின் மனக் கவலை

கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கலையரங்குகள், ஓய்வறைகள் என்று ராவணனின் அந்தப்புரத்தில் இருந்த பல இடங்களில் தேடியும் ஹனுமானால் சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ராமபிரானின் மனைவியைத்  தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"என்னால் சீதையை எங்கும் காண முடியவில்லையே! ஒருவேளை அவர் இறந்து போயிருப்பாரோ? தர்மத்தின் வழியிலிருந்து வழுவாமல் தன் கணவருக்கு விஸ்வாசமாக இருந்ததால், சிந்தையிலும் செயலிலும் கொடியவனான ராவணன்   சீதையைக் கொன்றிருப்பானோ? அல்லது ராவணனின் அரண்மனையில் இருந்த பெண்களின் குரூரத் தோற்றத்தைக் கண்டு பயந்த சீதை  அந்த பயத்தினாலேயே இறந்திருப்பாரோ?

" மற்ற வானரங்களுடன் நீண்ட காலம் செலவழித்து விட்டு இப்போது சீதையின் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்காமல் என்னால் எப்படி சுக்ரீவனைப்  பார்க்க முடியும்? தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் இயல்புடையவன் ஆயிற்றே சுக்ரீவன்?

"அந்தப்புரம் முழுவதும் தேடியதில் ராவணனின் பெண் துணைகள் அனைவரையும் பார்த்து விட்டேன். ஆனால் கற்புக்கரசி சீதையை என்னால் காண முடியவில்லை. என் முயற்சி எல்லாம் வியர்த்தம் ஆகி விட்டது. நான் திரும்பிச் சென்றதும் என் நண்பர்கள் 'வீரனே, நீ அங்கு போய் என்ன செய்தாய்? அதை விவரமாகச் சொல். உனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன ஆயிற்று?'என்றெல்லாம் கேட்பார்கள். சீதையைக் கண்டு பிடிக்க முடியாதபோது நான் அவர்களுக்கு  என்ன பதில் சொல்ல முடியும்?

"நான் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆனால் அவர்கள் நான் இறந்து விட்டதாக நினைத்து விடக் கூடும். நான் திரும்பிச் சென்றதும், அங்கதன், ஜாம்பவான் போன்றோர்  என்னைச் சூழ்ந்து கொண்டு என்னைக்  கேலி பேசத் தொடங்கி விடுவார்கள். ஆனால் விரக்தியின் மூலம்   செல்வத்தையோ, நன்மையையோ அடைய முடியாது.  விரக்தியிளிருந்து மீள்வதுதான் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். ஒரு பொழுதும் விரக்தி அடையாதவனால்தான் எந்த வேலையிலும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஈடுபட முடியும். விரக்தியால் பாதிக்கப்படாத மனநிலையில் செய்யப்படும் செயல்தான் வெற்றியைத் தேடித்தரும். எனவே விரக்தியான மனநிலைக்கு ஆளாகாமல் உற்சாகத்துடன் நான் இன்னொரு முறை முயன்று பார்க்கப் போகிறேன். இதுவரை நான் தேடாத இடங்களில் தீவிரமாகத் தேடப் போகிறேன்."

இவ்வாறு உறுதி எடுத்து கொண்டு அவர் தன் தேடலைத் தொடர்ந்தார்.

இதுவரை அவர் உணவுக்கூடங்கள், உயர் வசதி கொண்ட மாளிகைகள், கலைக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் தேடி விட்டார். அடுத்தபடியாக அவர் தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள், நகரின் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கட்டிடங்கள், பாதாள அறைகள், நினைவு மண்டபங்கள் ஆகிய இடங்களில் தன தேடலைத் தொடர்ந்தார்.

அரண்மனைக்கு உள்ளும் வெளியும் இருந்த எல்லா இடங்களிலும் தேடினார். பல கட்டிடங்களுக்குள் நுழைந்து வெளி வந்தார். சில இடங்களில் உள் புகுந்து தேடினார். சில கதவுகளைத் திறந்து பார்த்தார். திறக்க முடியாத கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே போனார்.  எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார்.

ராவணனின் அந்தப்புரத்துக்குள் அவர் தேடாத இடம் ஒரு உள்ளங்கை அளவு கூட இல்லை.  சுவர்களுக்கு இடையே இருந்த குறுகிய சந்துகள், நினைவு கோபுரங்கள், கிணறுகள், குளங்கள் என்று எல்லா இடங்களிலும் தேடினார். அவர் தேடிய இடங்களில் எல்லாம் கோரமான தோற்றம் கொண்ட பல அரக்கிகளைக் கண்டார்; ஆனால் சீதை மட்டும் காணப்படவில்லை.  நிகரில்லாத அழகு படைத்த வித்யாதரப் பெண்களை அவர் கண்டார்; ஆனால் சீதையைக் காணவில்லை. ராவணனால் பலவந்தமாக அழைத்து வரப்பட்ட முழு நிலவு போல் முகம் படைத்த நாகலோகப் பெண்களை அவர் பார்த்தார்; ஆனால் ராமரின் பத்தினியான சீதையைப் பார்க்கவில்லை.

இந்தப் பெண்களையெல்லாம் பார்த்த ஹனுமான் சீதையைக் காணவில்லையே என்று மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தார். பல வானரர்களின் முயற்சியும், தான் கடலைத் தாண்டி வந்ததும் பயனளிக்காமல் போய் விட்டதே என்று வருந்திய  வாயுபுத்திரரான ஹனுமான்  மனம் உடைந்தவராக தன இருந்த உயரமான கட்டிடத்திலிருந்து கீழே இறங்கினார்..Sunday, November 8, 2015

பதினொன்றாவது சர்க்கம் - உணவுக்கூடத்தில் தேடல்

மண்டோதரியைச் சீதை என்று நினைத்ததைத் தவறென்று உடனேயே உணர்ந்து கொண்ட ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:" ராமனைப் பிரிந்த நிலையில் சீதாப் பிராட்டி உண்ண மாட்டார், உறங்க மாட்டார், ஆபரணங்களை அணிய மாட்டார், ஏன் தண்ணீரைக் கூடத் தொட  மாட்டார். எந்த ஆண் அருகிலும் - அவன் தேவேந்திரனாகவே இருந்தாலும் - போக மாட்டார். தேவர்களிடையே கூட ராமனுக்கு இணையானவர் எவரும் இல்லை. அதனால் நான் பார்த்த பெண்மணி வேறு யாராவதாகத்தான்  இருக்க வேண்டும்"

இந்த முடிவுக்கு வந்த பின் ஹனுமான் உணவுக் கூடத்தில் சீதையைத் தேட ஆரம்பித்தார்.

காமக் கேளிக்கைகளினாலும், ஆடல் பாடலினாலும் களைப்படைந்த பல பெண்களை ஹனுமான் அங்கே பார்த்தார். இன்னும் சிலர் மதுவுண்ட மயக்கத்தில் விழுந்து கிடந்தனர். சிலர் மிருதங்கங்கள் மீது சாய்ந்தபடியும், சிலர் முரசுகள் மற்றும் சிறு மர இருக்கைகள் மீது சாய்ந்தபடியும், இன்னும் சிலர்  மென்மையான படுக்கைகள் மீது படுத்தும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அழகை அற்புதமாக விவரிக்கும் கலைத்திறன்  கொண்ட பெண்கள், பாடல்களின் பொருளைச் சிறப்பாக விளக்கும் திறன் பெற்ற பெண்கள், காலத்துக்கும், இடத்துக்கும் தக்கவாறு பேசும் திறமை பெற்ற பெண்கள் ஆகியோர் அடங்கிய நூற்றுக் கணக்கான பெண்களிடையே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ராவணன்.  அந்தப் பெண்களுக்கிடையே ராவணன் படுத்திருந்த காட்சி பல ஜாதிப் பசுக்களிடயே ஒரு காளை படுத்திருப்பது போல் இருந்தது. பல பெண்களால் அவன் சூழப்பட்டிருந்த காட்சி பெண் யானைக் கூட்டத்துக்கு நடுவே இருக்கும் ஒரு கொம்பன் யானையைப் போலவும் இருந்தது.

 மனிதர்கள்  உண்ண விழையும் எல்லா உணவுப் பண்டங்களும் அங்கே இருந்தன. மான், எருமை, காட்டுப் பன்றி ஆகியவற்றின் மாமிசங்கள் அங்கே தனித் தனியே வைக்கப்பட்டிருந்தன. பாதி உண்ணப்பட்ட மயில் மற்றும் கோழி இறைச்சிகள் நிறைந்த தங்கப் பாத்திரங்களையும் ஹனுமான் அங்கே பார்த்தார். பன்றிகள் மற்றும் பருந்துகளின் மாமிசம் தயிரில் சமைக்கப்பட்டு, கடுக்காய், கார உப்பு ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டபன்றிகள் மற்றும் பருந்துகளின் மாமிசமும், முள்ளம்பன்றி, மான், மயில் போன்றவற்றின் இறைச்சியும்  உண்ணத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

பலவகைப் புறாக்கள், எருமைகள் ஆகியவற்றின் இறைச்சி, மீன்கள் ஆகியவற்றுடன் பலவகைக் காய்களால் சமைக்கப்பட்ட உணவுகள், பானங்கள் மற்ற தின்பண்டங்களும் அங்கு நிறைந்திருந்தன.. புளிப்பு, உப்பு சுவை மிகுந்த உணவுகள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை ஆகிய பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறுக் கலவைகள், பழச்சாறுடன், பாலும், தேனும் கலந்த தயாரிப்புகள் ஆகியவும் அங்கு இருந்தன.

அந்த அறையில் பெண்களின் உடல்களீருந்து நழுவி விழுந்த காப்புகள், வளையல்கள், சங்கிலிகள் போன்றவை பரவிக் கிடந்தன. பழங்கள் நிறைந்த  பல தட்டுக்களும், பூங்கொத்துக்கள் நிறைந்த பூச்சாடிகளும் அந்த இடத்துக்கு ஒரு அழகிய தோற்றத்தை அளித்தன. விளக்குகள் ஏதும் எரியாத நிலையிலும், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் சாய்வு நாற்காலிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளியினால் அந்த உணவுக்கூடம்  ஒளி  பெற்று விளங்கியது.

சாதாரண மற்றும் போதையூட்டும் பானங்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், தேன், பழ ரசங்கள், பூக்களின் சாறுகள், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி, திறமையான சமையற்காரர்களால் சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள் ஆகிய பல்வகை உணவு வகைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடங்களில்  வைக்கப்பட்டிருந்தது அந்த அறைக்கு ஒரு அலாதியான தோற்றத்தை அளித்தது.  தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த கோப்பைகள் மதுவகைகளால் நிரம்பி இருந்தன. தங்கம், படிகம் ஆகியவற்றால் செய்யப்பட பூச்சாடிகளும், தங்கத்தினால் ஆன கை கழுவும் தொட்டிகளும் அங்கே காணப்பட்டன. காலியான மற்றும் பாதி நிரம்பிய  கோப்பைகளையும் ஹனுமான் அங்கே பார்த்தார்.

பல இடங்களிலும் காணப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள், மீதம் வைக்கப்பட்ட அரிசி உணவுகள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே ஹனுமான் நடந்தார். சில இடங்களில் உடைந்த பாத்திரங்களையும், கீழே கவிழ்ந்திருந்த தண்ணிர் கூஜாக்களையும், வேறு சில இடங்களில் பழக் குவியல்களையும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்க் கொத்துக்களையும் அவர் பார்த்தார்.

மென்மையாக அமைக்கப்பட்டிருந்த  பல படுக்கைகள் காலியாக இருந்தன. சிலவற்றில் சில பெண்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்தனர். உறங்கிகொண்டிருந்த பெண்களில் சிலர் தூக்கக் கலக்கத்தில் மற்ற பெண்களின் மேலாடைகளை உருவி அவற்றைத் தங்கள் மீது போர்த்தியபடி படுத்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த  ஆடைகளையும்,மாலைகளையும் அவர்கள் மூச்சுக் காற்று தென்றலைப் போல் அசைத்துக்கொண்டிருந்தது.

அங்கே வீசிக்கொண்டிருந்த மென்மையான காற்று சந்தனக்கலவையின் மணத்தையும், பல்வகை பானங்களின் மணத்தையும், மலர்மாலைகளின் நறுமணத்தையும் சுமந்து கொண்டிருந்தது. புஷ்பக விமானத்தின் மீது ஊற்றப்பட்டிருந்த வாசனைத் திரவத்தின் மணமும், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட சந்தனம் மற்றும் ஊதுவத்தியின் மணமும் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தன. அந்த இல்லத்தில் இருந்த பெண்களில் சிலர் சிவப்பு நிறத்தினர், சிலர் கருத்த நிறத்தினர், சிலர் இடைப்பட்ட நிறத்தினர், இன்னும் சிலர் தங்க நிறத்தினர். துக்கக் கலக்கத்தினாலும், காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தைர்ந்ததாலும் அவர்கள் வாடிய தாமரை மலர்களைப் போல் சோர்ந்து காணப்பட்டனர்.

அந்தப்புரம் முழுவதும் தேடிய பின்பும் ஹனுனானால் சீதையைக் காண முடியவில்லை. அந்தப் பெண்களை நெருக்கமாகப் பார்த்ததால் தாம்  ஒழுக்க நெறியிலிருந்து வழுவி விட்டோமோ என்று அவர் மனம் வருந்தினார். "எதிரி அரசனின் மனைவிகளாக இருந்த போதிலும், இந்தப் பெண்களை அவர்கள் உறங்கும்போது பார்த்தது  பாவச் செயல்தான். மற்றவர்களின் மனைவிமார்களை இவ்வாறு பார்த்தது சமுதாயத்தால் ஏற்கப்பட்ட ஒழுக்க நெறியை மீறிய செயல்தான்,  ஆயினும், உயர்ந்தவரான ராமபிரானின் மனைவியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான் இப்படிச் செய்தேன்  என்ற ஆறு தல் எனக்கு : இருக்கிறது."

ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவரான ஹனுமான், தன் முன் இருக்கும் கடமையைப் பற்றிய ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்காக ஒரு புதிய வழிமுறையைப பற்றிச் சிந்தித்தார்.

"அனேகமாக ராவணனின் அந்தப்புரத்தில் இருக்கும் எல்லாப் பெண்களையுமே நான் பார்த்து விட்டேன். ஆயினும் என் மனதில் எந்த விதத் தவறான எண்ணமும் எழவில்லை. புலன்களை நல்வழியிலோ தீயவழியிலோ செலுத்துவது மனம்தான்.  என் மனதில் எந்த ஒரு சஞ்சலமும் ஏற்படவில்லை. ஒரு  பெண்ணைத் தேட வேண்டுமென்றால் பெண்கள் மத்தியில்தான், பெண்கள் எங்கே இருப்பார்களோ அங்கேதான் தேட வேண்டும். வேறு இடங்களில் அவர்கள் இருக்க மாட்டார்கள். மான் கூட்டத்தில் போய் ஒரு பெண்ணைத் தேட முடியாது. அதனால்தான் ராவணனின் அந்தப்புரத்தில் நான் சீதையைத் தேடினேன். ஆயினும் அந்தப்புரம் முழுவதும் தேடியும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை."

தேவ லோகம், கந்தர்வ லோகம் மற்றும் நாகலோகத்தைச் சேர்ந்த பெண்களை அங்கே ஹனுமான் பார்த்தார். ஆனால் சீதையை அவர் அங்கே காணவில்லை. பல  உயர் குலப் பெண்களைப் பார்த்தும் சீதையைப்   பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்ட ஹனுமான் அந்த உணவுக் கூடத்திலிருந்து வெளியே வந்து தனது தீவிரத் தேடலைத் தொடர்ந்தார்.Thursday, September 24, 2015

பத்தாவது ஸர்க்கம் - மண்டோதரியைக் காணுதல்

படிகத்தால் செய்யப்பட்டு, தங்கத்தாலும் தந்தத்தாலும் இழைக்கப்பட்டு, வைரம் மற்றும் பல கற்கள் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டிலை ஹனுமான் பார்த்தார். அதன் மீது போடப்பட்டிருந்த மெத்தைகள், விரிப்புகள், தலையணைகள் ஆகியவற்றிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் அது சொர்க்கலோகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்டிலைப் போலவே தோன்றியது.

தங்க வேலைப்பாடுகள் மிகுந்து சூரியன் போல் ஜொலித்த ஒரு நாற்காலி ஒன்றும் அங்கே இருந்தது. ஓய்வெடுக்கத் தேவையான எல்லா வசதிகளும் அதில் அமைக்கப் பட்டிருந்தன.  அதன் அருகில் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்திரன் போல் தோற்றமளித்த ஒரு வெள்ளை நிறக் குடை இருந்தது.

கட்டிலைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் சாமரம் வீசத் தயாராகப் பணிப் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். பலவகை ஊதுவத்திகளின் மணம் எங்கும் பரவியிருந்தது. கட்டிலின் மீது விலையுயர்ந்த கம்பளங்களும், தோலினால் செய்யப்பட்ட விரிப்புகளும்  விரிக்கப்பட்டிருந்தன.  கட்டிலைச் சுற்றிலும் உயர் ரக மலர்களால் செய்யப்பட்ட மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

கட்டிலின் மீது ஆடம்பரமான படுக்கையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ராவணனை ஹனுமான் பார்த்தார். அவன் உடல் கார்மேகம் போல் கருத்திருந்தது. அவன் கண்கள் சிவந்திருந்தன. அவன் கைகள் நீளமாக இருந்தன. அவன் அணிந்திருந்த உடையின் ஓரங்கள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தன.

அவன் உடல் முழுவதும் நறுமணம் வீசிய சிவந்த சந்தனக் கலவை தடவப்பட்டிருந்தது. அவன் உடலில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் மேகத்தின் ஊடே ஒளி விடும் மின்னல் கீற்றுக்களைப் போல் ஜொலித்தன. அழகிய தோற்றம் கொண்டிருந்த அவன்,  தான் விரும்பும் வடிவத்தை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்தவன். மரங்களாலும் காடுகளாலும் மூடப்பட்டிருக்கும் மந்தர மலையைப் போல் இருந்தது அவன் தோற்றம்.

அரக்கர்களுக்கு ஊக்கமளிப்பவனாகவும், அரக்கர் குலப் பெண்களால் விரும்பபட்டவனாகவும் இருந்த அந்த ராவணன் இரவில் நடந்த காதல் விளையாட்டுகளால் களைத்துப் போயிருந்தான். போதையூட்டும் பானங்களை அருந்தியிருந்தாலும் அவன் போதையில் இருந்தவனாகத் தோன்றவில்லை.

நாகப்பாம்பு சீறுவதுபோல் மூச்சு விட்டுக் கொண்டிருந்த  ராவணனை நெருங்கிய ஹனுமான், முதலில் பயந்து போனது போல் பின் வாங்கினார். அதன் பிறகு சில படிகள் ஏறி ஒரு மேடை மீது நின்று ராவணனை கவனித்தார். ராவணனின் படுக்கை ஒரு பரந்த ஏரியைப் போலவும், அதன் மீது படுத்திருந்த ராவணன் அந்த ஏரியில் படுத்திருந்தஒரு யானையைப் போலவும் தோற்றமளித்தனர்.

அவனது பலம் பொருந்திய கைகளைப் பார்த்தார் ஹனுமான். அவன் தனது   புஜங்களில் தங்க வளையங்கள் அணிந்திருந்தான். இந்திரனின் கொடிக்கம்பம் போல் தோற்றமளித்த அவன்  பரந்த தோள்களில் ஐராவதத்தின் தந்தம், இந்திரனின் வஜ்ராயுதம், திருமாலின் சக்கரம் ஆகியவை ஏற்படுத்திய வடுக்கள் மிகுந்திருந்தன.

அவன் தோள்கள் வலுவாகவும், அளவாகவும், அழகாகவும் தோற்றமளித்தன. அவன் கைகள் அழகான விரல்களையும்  அதிர்ஷ்ட ரேகைகளையும் கொண்டிருந்தன. அவன் கைகளின் முழுத்தோற்றம் இரும்புத் தடிகளைப் போலவும், யானையின் தந்தங்களைப் போலவும் இருந்தன. இரண்டு ஐந்து தலை நாகங்கள் படுக்கையில் படுத்திருப்பது போல் அவை தோற்றமளித்தன.

அவன் கைகளில் முயல் ரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் நறுமணம் வீசும் உயர் ரக சந்தனக் கலவை பூசப்பட்டிருந்தது. அவன் கைகள் பலம் கொண்ட கைகளைக் கொண்ட பெண்களால் பதமாக அழுத்தப்பட்டிருந்தன. (மசாஜ் செய்யப்பட்டிருந்தன). அந்தக் கைகள் (தங்கள் செயல்களால்) பல யக்ஷர்கள், பன்னகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் தானவர்களைக் கண்ணீர் விட்டு அழச் செய்திருக்கின்றன. மலை போல் தோற்றம் கொண்ட ராவணனின்  கைகள்  மந்தர மலையின் இரு சிகரங்களைப் போல் விளங்கின

ராவணனின் மூச்சுக் காற்றின்  மணம் மா, புன்னாகம் மற்றும் வகுள மலர்களின் நறுமணத்துடன் அவன் உட்கொண்ட உணவுவகைகள், மதுபானங்கள் ஆகியவற்றின்   மணமும் சேர்ந்த கலவையாக இருந்தது. அவனுடைய பரந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட மூச்சுக்காற்று அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது.

முத்துக்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மகுடம் அவன் தலையில் இருந்தது. அவன் காதணிகளின் ஜொலிப்பால் அவன் முகம் பிரகாசமாகக் காணப்பட்டது. முத்து மாலைகளாலும், சிவந்த சந்தனக் கலைவையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவன் மார்பு பரந்தும் உறுதியாகவும் காணப்பட்டது. அவன் மார்பின் மீது போடப்பட்டிருந்த உயர்ந்த ரக வெள்ளைப் பட்டாடை கலைந்திருந்தது. மஞ்சள் நிறப் பட்டாடையை அவன் அணிந்திருந்தான்.

அவன் கண்கள் சிவந்திருந்தன. கருப்பு உளுந்து குவிக்கப்பட்டது போல் இருந்தது அவனுடைய தோற்றம். அவன் மூச்சு நாகத்தின் சீற்றம் போல் இருந்தது. கங்கைக்குள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த யானையை ப் போல் அவன் தோற்றமளித்தான்.

நான்கு தங்க விளக்குகள் அவன் தோற்றத்தை எடுத்துக் காட்டின. மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்ப்ட்ட மேகம் போல் அவன் காட்சி அளித்தான். அவனது மனைவிமார்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவன் அவன்.

மேலே விவரிக்கப்பட்டவாறு தோற்றமளித்த அந்த ராட்சத அரசனையும் அவன் கால்மாட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவன் மனைவிகளையும் ஹனுமான் பார்த்தார்.

ஒளி வீசிய காதணிகளையும், வாடாத மலர்களையும் அணிந்திருந்த
பெண்களை ஹனுமான் பார்த்தார். நாட்டியத்தில் தேர்ந்த சில பெண்களும், தாள இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் பெற்ற சில பெண்களும் அங்கே அமர்ந்திருந்தனர்.

அரிய ஆபரணங்களை அணிந்திருந்த சில பெண்கள் ராவணனின் தோள் மீதும், மடி மீதும் சாய்ந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் தங்கத்தால் செய்யப்பட கங்கணங்களையும் , காதுகளில் வைரம் , வைடூர்யம் ஆகியவற்றால் செய்யப்பட  காதணிகளையும் கண்டார் ஹனுமான்.

விண்மீன்களால் வானம் ஒளியூட்டப்படுவது போல், அந்தப் பெண்கள் அணிந்திருந்த அழகிய காதணிகளாலும், நிலவை ஒத்த அவர்கள் முகங்களாலும் அந்த அறையே ஒளி பெற்று விளங்கியது. ராவணனின் அந்தப்புரப் பெண்கள் அனைவருமே காம விளையாட்டுக்களால் களைப்படைந்து அங்கும் இங்குமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

நாட்டியம் அறிந்த ஒரு பெண் நாட்டிய முத்திரை பதிப்பது போன்ற தோற்றத்தில் தன உடலை வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். வீணையைத் தன மார்பில் சாய்த்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் ஓடத்தில் சிக்கிக் கொண்ட தாமரைக்கொடியை ஒத்திருந்தது.

இன்னொரு பெண் தனது தாள வாத்தியக் கருவியைக் குழந்தையை அணைப்பது போல் அணைத்தபடி படுத்திருந்தாள். இன்னொரு கரு விழி மங்கை நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பிய கணவனை அணைத்துக் கொள்வது போல் ஒரு முரசைத் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தாமரை விழியாள் தனிமையில் காதலனுடன் இருப்பது போல் தன் வீணையை அணைத்தபடி படுத்திருந்தாள்.

தூக்கத்தில் தன் கணவனை அணைத்தபடி படுத்திருப்பதுபோல் மிருதங்கத்தை இறுகத் தழுவியபடி  உறங்கிக் கொண்டிருந்தாள் பொன் நிறமும், மென்மையான சருமமும், கட்டுடலும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு பெண். மத்தளத்தைப் பக்கவாட்டில் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஒரு அழகி. கணவனை ஒரு புறமும் குழந்தையை இன்னொரு புறமும் அணைத்தபடி உறங்குவதுபோல், திண்டிமம்  என்ற இரட்டைத் தாள வாத்தியக் கருவியை இருபுறமும் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி.

தாமரை விழி நங்கை ஒருத்தி ஒரு பெரிய முரசை இறுக அணைத்தபடி மிகுந்த களைப்புடன் உறங்கிக் கொண்டிருதாள். கடம் என்ற தாள வாத்தியக் கருவியைத் தன் மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் வசந்த காலத்தில்  பல வித மலர்களால் கோர்க்கப்பட்டு நீர் தெளிக்கப்பட்ட மாலையைப் போல் இருந்தது.    இன்னொரு பெண் தங்கக்குடம் போன்ற தன மார்பகங்களைத் தன உள்ளங்கைகளால் மூடி மறைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். போதையில் இருந்த அழகிய கண்களையுடைய இன்னொருத்தி தன பக்கத்தில் படுத்திருந்த பெண்ணை அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்கள் பலரும் காம வயப்பட்ட நிலையில் தங்கள் காதலர்களை அணைத்துக் கொள்வதுபோல் இசைக்கருவிகளை மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

இவர்களிடமிருந்தெல்லாம் விலகி அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்றில் படுத்திருந்த ஒரு அழகிய பெண்ணை ஹனுமான் பார்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள், ரத்தினங்கள் ஆகியவற்றால் செய்யப்பட அணிகலன்களை அவள் அணிந்திருந்தாள். அவள் அழகு அந்த அரண்மனைக்கே அழகு சேர்ப்பதாக இருந்தது. எல்லோருக்கும் பிரியமானவளான அந்தத் தங்க நிற மங்கை வேறு யாரும் இல்லை, அந்த அரண்மனை அந்தப்புரத்தின் ராணியான மண்டோதரிதான்.

அவள் அழகு, இளமை,மேன்மையான தோற்றம் ஆகியவற்றை வைத்து முதலில்  அவளை சீதை என்று எண்னி வாயு புத்திரர்  பெருமகிழ்ச்சி அடைந்தார். குரங்குகளின் இயல்பைப் பின்பற்றி, தன் வாலை முத்தமிட்டும், கைகளைத்தட்டியும், நடனமாடியும், ஒவ்வொரு தூணாக ஏறிக்குதித்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஹனுமான்.


Saturday, July 4, 2015

ஒன்பதாவது ஸர்க்கம் - ராவணனின் அந்தப்புரம்

ராவணனின் அரண்மனை ஒரு யோஜனை  (சுமார் 10 மைல்) நீளமும், அரை யோஜனை (சுமார் 5 மைல்) அகலமும் கொண்டிருந்ததது. எதிரிகளை அழிக்கும் வல்லமை பெற்றவரான ஹனுமான், மற்ற எல்லா அரக்கர்களின் இல்லங்களிலும் தேடி அலைந்து அங்கெல்லாம் சீதையைக் காணாததால், கடைசியாக ராவணனின் இல்லத்துக்குள் நுழைந்தார்.

ராவணனின் அந்தப் பெரிய அரண்மனை, எப்போதும் தயார் நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய காவலர்களாலும், மூன்று மற்றும் நான்கு தந்தங்கள் கொண்ட யானைகளாலும் காக்கப்பட்டு வந்தது.

அந்த அரண்மனைக்குள், ராவணனின் மனைவிகளும், அவனால் சிறை பிடிக்கப்பட்ட அரச குலப் பெண்களும் இருந்தனர். முதலைகள், திமிங்கிலங்கள், பாம்புகள், மீன்களால் நிறைந்த, அலைகளால் பொங்கிக் கொண்டிருக்கும் கடலைப்போல், அணுகுவதற்கு அரிதானதாக இருந்தது அந்த அரண்மனை.

குபேரன், இந்திரன், சூரியன் ஆகியோரின் இல்லங்களுக்கே உரித்தான செல்வங்களும், சிறப்புகளும் ராவணனின் அரண்மனையிலும் இருந்தன. ராவணனின் அரண்மனையின் செல்வச் செழிப்பு இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரின் இல்லங்களின் செல்வச் செழிப்பை விட அதிகமாகவே இருந்தது.

ராவணனின் அரண்மனைக்குள் வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு விமானத்தைப் பார்த்தார் அந்த வாயுபுத்திரர். மாளிகை போன்று பிரும்மாண்டமாக அமைந்திருந்த அந்தப் புஷ்பக விமானத்தை  விண்ணுலகில் விஸ்வகர்மா உருவாக்கியிருந்தார். விமானத்தில் அமர்ந்திருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எங்கும் செல்லக்கூடிய சக்தி படைத்தது அந்த  விமானம்.

 முழுவதும் நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட, மூவலகில் வசிப்பவர்களாலும் போற்றப்பட்ட அந்த விமானத்தை, குபேரன் கடுமையான தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பெற்றான். குபேரனை வெற்றி கொண்டு, ராட்சஸ அரசன் ராவணன் அந்த விமானத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

அந்த விமானத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த  மான் போன்ற பல உருவங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் தங்கள் பளபளப்பினால் நெருப்புத் தூண்கள் போல் ஒளிர்ந்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அதன் நுழைவாயில் கோபுரங்கள் மேரு மலை போலவும், மந்தர மலை போலவும் உயர்ந்து விண்ணைத் தொட்டன.

அந்தப் புஷ்பக விமானத்திற்குள் நுழைந்து பார்த்தார் ஹனுமான். அதைச் சுற்றிப் பல தாழ்வாரங்கள் இருந்தன. உள்ளே நுழைந்தபோதே பல்வேறு உணவுப் பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றின் இனிய நறுமணம் வீசியது. அந்த நறுமணம் உள்ளே வருமாறு அவரை நட்புடன் வரவேற்பது போல் இருந்தது.

பிறகு, அந்த அரண்மனையில் ராவணனின் அந்தப்புரத்தை அவர் பார்த்தார். ஒரு அழகான உயர் குலப் பெண்ணைப் போல் அது பார்ப்போரைக் கவர்வதாகவும், மங்களகரமாகவும் இருந்தது. அதன் படிகளில் எண்ணற்ற நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. அந்த அறையின் சாளரங்கள் தங்கத்தகடுகளால் ஆன பலகைகளைக் கொண்டிருந்தன.

அதன் தரை வைரத்தாலும்  தந்தத்தாலும் அமைக்கப்பட்டிருந்தது. தங்கம், மற்றும் வெள்ளியால் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் பவளம் மற்றும் முத்துச் சரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சில உயரமான தூண்களைப் பார்த்தபோது, அவை அந்த அரண்மனையை வானுக்கு இட்டுச்  செல்வதற்காக அமைக்கப்பட்ட இறக்கைகள் போல் தோன்றின.

ராட்சஸ அரசன் வசதியாக உட்காருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆசனங்கள் பறவைகளின் இனிமையான கூவல்களும், இனிமையான நறுமணமும் நிறைந்திருக்கும் சூழலில் அமைக்கப்பட்டிருந்தன. பல்வகை ஊதுவத்திகளின் நறுமணம் எங்கும் நிறைந்திருந்தது. அங்கிருந்த எல்லாப் பொருட்களுமே அன்னப்பறவையைப்போல் வெண்மையாகவும், பிரகாசமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தன.

தரை முழுவதிலும் பலவகை மலர்கள் பரப்பப் பட்டிருந்தன. விரும்பியதைக் கொடுக்கும் காமதேனுவைப்போல் இருந்த அந்த அந்தப்புரம், செல்வத்தின் இருப்பிடமாகக் காட்சி அளித்தது. மக்கள் மனதிலிருந்த வருத்தம் அனைத்தையும் போக்கும் சிறப்பைப் பெற்றிருந்த அந்த அந்தப்புரம் உலகத்தில் எல்லோர் போற்றுதலுக்கும் உள்ளாகி இருந்தது.

ஒரு தாய் தன் குழந்தைகளின் ஐம்புலன்களையும் மகிழ்விக்கும் வண்ணம் அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதுபோல் அந்த அந்தப்புரம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

அதன் அழகைப் பார்த்த ஹனுமான், "இதென்ன தேவலோகமா, தெய்வங்களின் இல்லமா, இந்திரனின் மாளிகையா அல்லது கந்தர்வர்களின் கோட்டையா!" என்று வியந்தார். அங்கிருந்த விளக்குகளின் அழகைக் கண்டு பிரமித்தார்.

அங்கு திகழ்ந்த ஒளி, ஆபரணங்களின் பிரகாசம், அந்த இடத்தில் வெளிப்பட்ட ராவணனின் சக்தி இவை எல்லாம் அங்கே காமத்தீ கொழுந்து விட்டு எரிவதைக் காட்டுவதாக ஹனுமானுக்குத் தோன்றின.

அங்கே விலையுயர்ந்த படுக்கை விரிப்புகளில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த, பலவகை ஆபரணங்கள், மாலைகள், அழகு சாதனங்களின் துணையுடன் அழகாகத் தோன்றிய பல பெண்களைப் பார்த்தார்.

காமக் கேளிக்கைகளால் ஏற்பட்ட உடல் சோர்வினாலும், இனிய மதுவகைகள் ஏற்படுத்திய போதையாலும் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் ஏற்படுத்திய கிண்கிணிச் சத்தத்தினால், அந்தப்பெண்கள் அன்னப்பறவைகளும், தேனீக்களும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் தாமரைக் குளம்போல் தோற்றம் அளித்தனர்.

கண்களும், உதடுகளும்  மூடிய நிலையில், தாமரை மலர்களின் நறுமணத்தை வெளிப்படுத்தியபடி உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்களின் முகத்தை ஹனுமான் பார்த்தார்.

மது அருந்தியதால் போதை அடைந்திருந்த தேனீக்கள் அந்தப் பெண்களின் முகங்களைத் தாமரை மலர்கள் என்று நினைத்து அம்முகங்களின்மீது திரும்பத் திரும்ப வந்து அமர்ந்தன.

அழகிய பெண்களால் நிறைந்திருந்த ராவணனின் அந்தப்புரம் விண்மீன்கள் நிறைந்த வானம்போல் நிலவியது. அந்தப் பெண்களின் நடுவில் இருந்த ராவணன் விண்மீன்களுக்கு இடையில் திகழும் சந்திரன் போல் இருந்தான்.

அந்தப் பெண்களைப் பார்த்தபோது, ஹனுமானுக்கு, அவர்கள் தங்கள் நற்பலன்கள் தீர்ந்து விட்டதால் பூமியில் விழுந்து விட்ட வானத்து நட்சத்திரங்களைப் போல் தோன்றினர். தங்கள் வெண்மையான நிறத்தினாலும்,  பிரகாசமான உருவத்தாலும், அமைதியான தோற்றத்தாலும் அவர்கள் அந்த அந்தப்புரத்தில் ஒளி விடும் பெரிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளித்தனர்.

போதையூட்டும் பானங்களை அருந்தியதாலும், காமக்கேளிக்கைகளால் களைப்படந்ததாலும், அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த மாலைகளும் ஆபரணங்களும் அங்கே சிதறிக் கிடந்தன.

சிலரது நெற்றிப் பொட்டுகள் கலைந்திருந்தன. சிலரது கொலுசுகள் கழன்றிருந்தன. சிலரது முத்து மாலைகள் தரையில் விழுந்திருந்தன.   முத்துமாலைகள் உடைந்து சிதறியும், ஆடைகள் கலைந்தும், ஒட்டியாணங்கள் உடைந்தும் இருந்த நிலையில், அப்பெண்கள், பாரம் சுமந்ததால்  ஏற்பட்ட களைப்பைப் போக்கிக்கொள்ள தரையில் விழுந்து கிடந்த வண்டிச் சக்கரங்கள் போல் தோற்றமளித்தனர். யானைகளால் மிதித்துத் தள்ளப்பட்ட சில காட்டுக்கொடிகள் சில பூக்களுடன்  தரையில் கிடப்பது போல், சில பெண்கள், மற்ற ஆபரணங்கள் கீழே விழுந்த நிலையில், காதணிகள் மட்டும் அப்படியே இருந்த நிலையில் படுத்திருந்தனர்.

வேறு சில பெண்களின் மார்புகளை  அலங்கரித்த முத்து மாலைகள் சந்திரன் போலப் பிரகாசித்தன. அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னப் பறவைகள் போல் தோற்றமளித்தனர். சில பெண்கள் அணிந்திருந்த வைடூர்ய ஆபரணங்கள் மீன் கொத்திப் பறவைகள் போல் பிரகாசித்தன. வேறு சில பெண்கள் அணிந்திருந்த தங்க ஒட்டியாணங்கள் சக்ரவாகப் பறவைகள் போல் தோற்றமளித்தன. நதிக்கரை போல் பரந்திருந்த அவர்கள் இடுப்பு அப்பெண்களுக்கு அன்னம், கொக்கு, சக்ரவாகம் போன்ற பறவைகள் நிறைந்த நதியைப் போன்ற தோற்றத்தை அளித்தது.

மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணங்களை அணிந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் நதிகள் போல் தோற்றமளித்தனர். அவர்கள் முகங்கள் நதிகளில் மிதக்கும் தங்கத் தாமரைகள் போலவும், அவர்கள் உடல்களில் இருந்த நகக் கீறல்கள்  முதலைகள் போலவும், அவர்கள் அழகு, நதியின் இரு கரைகள் போலவும் காணப்பட்டன. ஆபரணங்களின் அழுத்தத்தினால்  அந்தப் பெண்களின் மென்மையான உடல்களில் ஏற்பட்டிருந்த தழும்புகள் அந்த ஆபரணங்களைப் போலவே அழகாக இருந்தன. அவர்களின் மூச்சுக் காற்றினால் படபடத்த அப்பெண்களின் உடைகளின் ஓரங்கள் அவர்கள் முகங்களின் மீது பட்டும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன.

பல்வகை ஆடைகள் அணிந்திருந்த, உடல் நிறத்தில் வேறுபட்டிருந்த பெண்களின் கன்னங்களைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகிய உடைகள் காற்றில் ஆடும் தோரணங்கள் போல் பளபளத்தன. சில அழகிய பெண்கள் அணிந்திருந்த காதணிகள் கூட அவர்கள் மூச்சுக்கற்று பட்டதால் படபடத்துக் கொண்டிருந்தன.

அந்தப் பெண்களின் முகங்களிலிருந்து வெளிப்பட்ட மணம் மிகுந்த மூச்சுக் காற்று ராவணனின் முகத்திலிருந்து வெளி வந்த இனிய மதுவின் மணம் கொண்ட மூச்சுக் காற்றுடன் கலந்தது. ராவணன் மீது அந்தப் பெண்களுக்கு இருந்த மயக்கத்தினால் ஒவ்வொரு பெண்ணும் ராவணனின் பிற மனைவிகளுடன் நேசமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. சில பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உடையையே தரை விரிப்பாகவும் தங்கள் வளைக்கரங்களையே தலையணைகளாகவும் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்தனர்.

போதை மயக்கத்தினாலும், காம வசப்பட்டதாலும் அந்தப் பெண்கள் மற்ற பெண்களைத் தொட்டுக்கொண்டும் தழுவிக்கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் மற்றவர்களின் கைகளைத் தலையணைகளாகக் கொண்டு உறங்கினர். எல்லோருமே மிக மகிழ்ச்சியான மன நிலையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மற்ற பெண்களுடன் கைகோத்தபடி உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் தோற்றம் ஆங்காங்கே மயங்கிய நிலையில் சில தேனீக்கள் அமர்ந்திருக்கும் பூமாலை போல் தோற்றமளித்தது.

அங்கே உறங்கிக் கொண்டிருந்த ராவணனின் அந்தப்புரப் பெண்களின் தோற்றம்  வைகாசி மாதத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு பூந்தோட்டம் போல் காட்சி அளித்தது.

எல்லாப்பெண்களின் உடைகள், கை கால் போன்ற உறுப்புகள், ஆபரணங்கள் ஆகியவை இருக்க வேண்டிய இடத்தில்  இடத்தில் இருந்தாலும்  எது யாருடையது என்று இனம் காண முடியாததாக இருந்தது.

அங்கிருந்த தங்க விளக்குகள் ராவணன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்களைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தன.

அந்தப் பெண்களில் அரக்கர் குலப் பெண்களைத் தவிர, அரச குமாரிகள், முனிவர்களின் பெண்கள், தேவர் குல  மற்றும்  கந்தர்வ குலப் பெண்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும் ராவணால் விரும்பப் பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் போரில் வெற்றி பெற்ற பின் ராவணனால் கொண்டு வரப் பட்டவர்கள். மற்றவர்கள் ராவணனிடம் மையல் கொண்டு அவனிடம் வந்து சேர்ந்தவர்கள்.

சீதையைத் தவிர மற்ற எல்லப் பெண்களுமே ராவணனின் வீரத்தால் கொண்டு வரப் பட்டவர்கள். அவர்கள் யாருமே தங்கள் விருப்பத்துக்கு விரோதமாக அவனால் கொண்டு வரப் படவில்லை.  அவர்களில் யாருமே வேறு யாரையும் காதலித்தவர்களோ மணந்து கொண்டவர்களோ இல்லை. அவர்கள் யாருமே மோசமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் யாருமே அழகில்லாதவர்கள் இல்லை. யாருமே அறிவிலிகளோ, அவமானத்துக்கு உள்ளானவர்களோ, அமங்கலமானவர்களோ இல்லை. காதலுக்குத் தகுதியற்றவர்களும் அவர்களில் யாரும் இல்லை.

"ராவணனின் மனைவிகள் அவனுடன் இருப்பது போல் ராமபிரானின் மனைவியும் அவருடன் இருந்தால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருப்பேன்! என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி இருக்குமே!" என்று நினைத்தார்  அறிவாளியான ஹனுமான்.

"சீதாப்பிராட்டி நற்பண்புகள் நிறைந்தவர். இலங்கை அரசன் ராவணன் அவர் விஷயத்தில் அக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறானே!" என்று நினைத்து வருந்தினார் அந்த வானர வீரர்.

Saturday, April 18, 2015

எட்டாவது ஸர்க்கம் - புஷ்பக விமான வர்ணனை

அந்த அரண்மனையின் மையப் பகுதியில்  ஆகாயத்தில் கட்டப்பட்ட மாளிகை போல் அமைந்திருந்த புஷ்பக விமானத்தை அந்த வானர வீரர் கண்டார்.  முத்துக்களாலும், வைரங்களாலும் அழகு செய்யப்பட்டிருந்த அந்த விமானத்தின் ஜன்னல்கள் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் கலையழகுடன் செய்யப்பட்டிருந்தன.

தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டிருந்த அந்த விமானத்தின் சக்தியை எவராலும் அளவிட முடியாது. அதை யாராலும் அழிக்கவும் முடியாது. அது போன்ற வேறு எந்த வாகனத்தையும் விஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அது உருவாக்கப்பட்டிருந்தது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அது அந்தரத்தில் நின்றது. அந்த விமானத்தால் எந்த இடத்துக்கும் செல்ல முடியும்.  சூரியனுக்குச் செல்லும் பாதையில் ஒரு மைல்கல் போல் அது நின்றது. அதன் ஒவ்வொரு பகுதியும் மிகவும் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. எல்லாப் பகுதிகளுமே நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. தேவர்களிடம் இருந்த எந்தப் பொருளிலும் இல்லாத சிறப்புகள் அந்த விமானத்தில் இருந்தன. அதன் எல்லாப் பகுதிகளுமே வியப்பூட்டும் வண்ணம் இருந்தன.

அரிய தவத்தின் மூலமே பெறக்கூடிய  எல்லா சக்திகளையும் கொண்டிருந்தது அந்த விமானம். அது எந்தத் திசையிலும் ப்றக்கக் கூடியது. அதில்  பிரமிக்க வைக்கும் அழகு கொண்ட அறைகள் இருந்தன. அதன் எல்லாப் பகுதிகளுமே சீராகவும் சிறப்புத் தன்மையுடனும் அமைக்கப்பட்டிருந்தன. தன் எஜமானனின் விருப்பத்துக்கேற்ப எங்கும் செல்லும் அந்த விமானத்தைக் காற்றால் கூடத் தடை செய்ய முடியாது. தேவர்களாலும், புனித வாழ்க்கை நடத்திய மனுதர்களாலும் மட்டுமே அடையக்கூடிய சொர்க்க லோகத்தை ஒத்திருந்தது அந்த விமானம்.

மலை உச்சிக்குச் செல்ல அமைக்கப்பட்டது போல் தோற்றமளித்த   சுழற்படிக்கட்டுகள் அதில் இருந்தன. இலையுதிர் காலச் சந்திரன் போல் அது தூய்மையான தோற்றம் கொண்டிருந்தது.  அதில் விண் முட்டும் அளவுக்கு உயரம் கொண்ட பெரிய அரக்கர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த காதணிகளால் அவர்கள் முகம் ஒளி விட்டது. வசந்த காலத்தில் மலரும் பூக்களைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அந்த விமானத்தைப் பார்க்கும்போது ஏற்பட்டது.

Friday, April 17, 2015

ஏழாவது ஸர்க்கம் - புஷ்பக விமானம்

வைடூர்யம் பதிக்கப்பட்ட, தங்கத்தால் ஆன ஜன்னல் கதவுகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார்.அவை மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட பெரும் மழை மேகங்கள் போல் காட்சியளித்தன. நிலவைக் கண்டு களிப்பதற்காக அந்தக் கட்டிடங்களில் திறந்த வெளி மேல் மாடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கட்டிடங்களில் இருந்த அறைகளுக்குள் சங்குகளும், விற்கள் முதலான ஆயுதங்களும் இருந்தன.

தேவர்களையும் அசுரர்களையும் ஒருங்கே கவர்ந்த பல கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார். எந்த விதக் குறையும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடங்கள் செல்வச் செழிப்பின் அடையாளங்களாக விளங்கின. அவை யாவும் ராவணனனின் திறமையால்  உருவாக்கப்பட்டிருந்தன.

ஹனுமான் அங்கே பார்த்த வீடுகள் யாவையும் கடும் உழைப்பினால் உருவாக்கப் பாட்டிருந்தன. எல்லா வசதிகளும் கொண்ட அக்கட்டிடங்கள் மயனால் உருவாகாப் பட்டவை போல் தோற்றமளித்தன. அவற்றுள் ஒரு கட்டிடம் மற்ற எல்லாவற்றையும் விட உயரமாக இருந்தது. தங்க நிற மேகக் கூட்டம் போல் காட்சியளித்த அந்தக் கட்டிடம் அதன் அழகான தோற்றத்தாலும், கலைச் சிறப்பாலும், ராவணனின் மேன்மையை ஒத்திருந்தது.

அங்கே அவர் ஒரு மாளிகை போல் தோற்றமளித்த புஷ்பக விமானத்தைப் பார்த்தார். அதன் அற்புதமான தோற்றம்,  வானுலகமே பூமியில் வந்து இறங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. பல மரங்களிலிருந்து வந்து படிந்திருந்த மகரந்தங்களால்  மூடப்பட்ட மலைச் சிகரம் போல் அது காட்சியளித்தது.

பல உயர் குலப் பெண்கள் அந்த விமானத்துக்குள் அமர்ந்திருந்தனர்.  அன்னப் பறவைகளால் அது வானில் செலுத்தப்பட்டது. பல மேகஙளை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டதுபோல் தோன்றிய அந்த விமானம் சந்திரன் உள்ளிட்ட கிரகங்களால் சூழப்பட்ட மலைச் சிகரம் போல் காட்சி அளித்தது. அந்த விமானத்தின் உட்புறத்தில் மலைகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள், தாமரை போன்ற மலர்களால் நிரம்பிய ஏரிகள், அடர்ந்த காடுகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப் பாட்டிருந்தன.

அதன்மீது  பதிக்கப்பட்டிருந்த நவரத்தினக் கற்களின் ஒளியால், புஷ்பக விமானம், கலையழகுடன் உருவாக்கப்பட்டிருந்த கட்டடங்களிலிருந்து வேறுபட்டுத் தெரிந்தது. (இல்லாவிட்டால், பார்ப்பதற்கு அதுவும் ஒரு பெரிய கட்டிடம்போல்தான் தோன்றியிருக்கும்!)

வெள்ளியாலும், பவழத்தாலும்  செய்யப்பட்டு, வைடூரியம் பதிக்கப்பட்ட பறவைகளின் உருவங்கள் விமானத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன. விமானம் வானில் பறக்கும்போது இந்தப் பறவைகளும் விமானத்துக்குக் கீழே பறந்து செல்வது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது.

இவை தவிர உயர் ஜாதிக் குதிரைகளின் உருவங்களும், நவரத்தினங்களால் செய்யப்பட்ட பலவகைப் பாம்புகளும் அந்த விமானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. மன்மதனின் உதவியாளர்கள்போல் வளைந்த சிறகுகளுடன் அழகான தோற்றத்துடன் விளங்கிய பல அழகிய பறவைகளின் உருவங்களும் அங்கே இருந்தன. நீலத் தாமரைப் பூக்களைத் துதிக்கைகளில் ஏந்தியபடி தாமரைத் தடாகங்களில் விளையாடிக்கொண்டிருந்த யானைகள், கையில் ஒரு தாமரையுடன் மங்களகரமாகத் தோன்றும் லக்ஷ்மி ஆகிய உருவங்களும் இருந்தன. மணம் வீசும் மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்த கால மரங்கள் போலவும், அழகிய குகைகளைக்கொண்ட ஒரு மலையைப்போலவும் விளங்கியது அந்த விமானம்.

அந்த அழகிய நகரம் முழுவதும் அலைந்து திரிந்த பிறகும் சீதையைக் காணமுடியவில்லையே என்று வருந்தினார் ஹனுமான்.